Saturday, November 10, 2012

பேஸ்புக்

 

பேஸ்புக்- முதல்பக்கம் 


மிஸ்டர் மார்க் ஷக்கர்பெர்க், 

ல்லூரி நிர்வாகத்திற்கு சொந்தமான புகைப்படங்களை திருடிய குற்றத்திற்காகவும், அந்த படங்களை உங்கள் சொந்த உபயோகதிற்கு பயன்படுதியமைக்காகவும், கல்லூரி இணைய செயல்பாட்டை முடக்கி இயங்கவிடாமல் செய்தமைக்காகவும், தனிப்பட்ட நபர்களின் அனுமதி இல்லாமல் அவர்கள் புகைப்படங்களை விளையாட்டுப் பொருட்களாக மாற்றியமைக்காகவும் கல்லூரி நிர்வாகம் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முற்பட்டுள்ளது. கல்லூரி ஒழுங்குக் கமிட்டியின் முன்பு ஆஜராகி உங்கள் தரப்பை விளக்க வேண்டும் என்று நிர்வாகம் உத்தரவிடுகிறது. 
- ஹார்வர்டு பல்கலைக்கழகம் 


மார்க் முதல்முறையாக எதிர்பார்ப்பையும் எதிர்ப்பையும் ஒருசேர சம்பாதித்த தருணம் இது. அதற்க்குக் காரணி அவருடைய பேஸ்மேஷ் என்னும் மென்பொருள். பேஸ்புக்கிற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததும், இன்றைய உலகமே இணையத்தில் இணைந்திருக்கக் காரணமும் பேஸ்மேஷ் என்னும் மென்பொருள் தான். மார்க் ஷக்கர்பெர்க் மற்றும் அமெரிக்க கல்லூரி மாணவர்களைப் பொறுத்த வரையில் பேஸ்புக் என்பது புதிய வார்த்தை இல்லை. தங்கள் அன்றாட கல்லூரி வாழ்கையில் பேஸ்புக்கை சந்திக்காமல அவர்கள் கடந்தது இல்லை. அமெரிக்கக் கல்லூரிகளில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள ஒவ்வொரு கல்லூரியும் பேஸ்புக் என்னும் புத்தகத்தை வெளியிடுவார்கள், அதில் அந்த கல்லூரி மாணவரின் தகவல்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு எண் என்று அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆரம்பகாலத்தில் அச்சுப் புத்தமாக வெளிவந்த பேஸ்புக் பின்னாளில் டிஜிடலாகவும் மாறியிருந்தது. இந்த டிஜிடல் வடிவ பேஸ்புக்கிலிருந்து தான் இன்றைய தினத்தில் உலகமே உபயோகம் செய்யும் கமர்சியல் பேஸ்புக்கிற்கான விதை போடப்பட்டது. 

                         
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒன்பது விடுதிகள் இருந்தன. அதில் ஒவ்வொரு விடுதிக்கு என்றும் தனித் தனி பேஸ்புக் உண்டு. மார்க் இருந்த விடுதியின் பெயர் கிர்க்லேன்ட் ஹவுஸ். இந்த விடுதியில் இருக்கும் மார்க்கின் அறை தான் அவரது ஆய்வுக்கூடம், அனைத்து செயல்முறைப் பயிற்சிகளும் இங்கிருந்தே ஆரம்பமாகின. அப்படி நடைபெற்ற ஒரு சோதனை முயற்சி தான் பேஸ்மேஷ். அதன் வெற்றி அவரை அழைத்துச் சென்ற இடம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு கமிட்டி அறை. 

ன்றைய இணைய உலகத்தில் மிகவும் கவர்சிகரமான பொழுதுபோக்கு விளையாட்டு "பேஸ்மேட்ச்" அல்லது "ஹாட் ஆர் நாட்". உங்களுக்குப் பிடித்த சில பிரபலங்களை நினைவில் கொள்ளுங்கள், அவர்களின் பெயர் A B C மற்றும் D. இந்த விளையாட்டை தொடங்கும் பொழுது A மற்றும் Bயின் முகம் திரையில் தெரியும், அதில் உங்கள் மனதிற்கு பிடித்த ஒரு பிரபலத்திற்கு வாக்களிக்க வேண்டும். உங்கள் வோட்டு Aக்கு என்றால், B மறைந்து C தோன்றும் A அப்படியே இருக்கும். இப்பொழுதும் உங்கள் வோட்டு Aக்கு என்றால், C மறைந்து D தோன்றும். கொஞ்சம் கற்பனை செய்யுங்கள் உலகம் முழுவதும் தங்களுக்கு பிடித்த பிரபலத்திற்கு வாக்களிக்கும், இறுதியில் யார் முதல் இடம் என்று தெரிவிக்கும். தங்களுக்குப் பிடித்த பிரபலம் முதலிடம் பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் மொத்த இணையமும் போட்டி போடும். அந்த காலத்தில் பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்த விளையாட்டில் தான் தங்கள் அதிக நேரத்தைக் களித்தார்கள். 


 
அக்டோபர் 28, 2003 அன்று மார்க் சிறிது குடித்திருந்தார். அந்தி சாய்ந்த இருள்வேளை மனம் முழுவதும் எரிச்சலும் கோபமும், அதற்கான காரணம் ஒரு பெண். பெண்? ஆம் ஒரு பெண். பேஸ்மேஷ் மற்றும் பேஸ்புக் இரண்டின் தொடக்கமும் ஒரு பெண்ணிலிருந்தே. மார்க்கைப் பொறுத்த வரையில் எதாவது ஒரு விசயத்தில் தன்னை ஈடுபடுத்தி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பார். அவரது மனம் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவரது மனம் எந்நேரமும் எதாவது ஒரு அல்காரித மொழியுடன் பேசிக் கொண்டே இருக்கும். ஒரு விசயத்தில் முடிவெடுத்து விட்டால் அதனுடன் பயணிக்க ஆரம்பித்துவிடுவார். அன்றும் அப்படித்தான் எரிச்சலின் உச்சத்தில் இருந்த மார்கிற்கு வேறு எதிலாவது தன் சிந்தனையை செலுத்த வேண்டும் என்ற அவசரத்தில் இருந்தார். 

மக்கெல்லாம் ரிலாக்ஸ்ஷேசன் மன நிம்மதி வேண்டும் என்றால், செய்யும் வேலையிலிருந்து நம்மை விடுவித்து பொழுது போக்குகளில் மனதை செலுத்துவோம். மார்க்கும் அப்படித்தான், இங்கு வித்தியாசப்படுவது அவருக்கும் நமக்குமான பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே. கல்லூரியில் படிக்கும் காலத்தில் படிப்பு தவிர்த்து பொழுதுபோக்காக பல்வேறு விதமான ப்ரோஜெக்ட்டுகளை சக மாணவர்களுக்கு செய்து கொடுப்பார். சிலவற்றை பணத்திற்காகவும் சிலவற்றை மன நிம்மதிக்காகவும் செய்வார். இந்த ப்ரோஜெக்ட்டுகளை செய்வதற்கு அவர் தேர்ந்து எடுத்த நேரம் அவருடைய பொழுதுபோக்கு நேரம் அல்லது அவரது பாடவேளைகளுக்கும் தூக்கத்திற்கும் இடையிலான பல மணி நேரங்கள். மார்க் தூங்குவது சில மணி நேரங்களே ஏனைய நேரம் முழுவது அவர் மனதில் லயித்திருப்பது எதாவது ஒரு விதமான ப்ராஜெக்ட் ப்ராஜெக்ட் ப்ராஜெக்ட்.


ங்கள் மனதில் A B C D யின் இடத்தில உங்களுக்குப் பிடித்த நடிகர்களை  
(உம் : ரஜினி கமல் அஜித் விஜய்) வைத்து பேஷ்மேட்ச் ஆட்டத்தை ஆடிப்பாருங்கள், ஏன் பல இளைஞர்களும் தங்களுக்குப் பிடித்த பிரபலத்தை முன்னிலைப் படுத்த ஓயாமல் வாக்களித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது புரியும். இதே போன்ற அல்லது இதே விளையாட்டிற்கு வேறு முகம் கொடுத்தவர் தான் மார்க். இந்த பேஷ்மாட்சை அடிப்படையாகக் கொண்டு உருவான விளையாட்டிற்கு மார்க் வைத்த பெயர் தான் பேஷ்மாஷ். தன்னிடம் இருந்த எரிச்சலை திசை திருப்ப வேறு எதையோ சிந்தித்துக் கொண்டிருந்த நேரம் மார்க்கின் கணினியில் திறந்திருந்த தளம் கிர்க்லேன்ட் ஹவுசின் பேஸ்புக். அதில் இருந்த புகைப் படங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் மார்க். இந்த நேரத்தில் மார்க் முகத்தில் ஒரு பிரகாசம் பல நாள் தேடிக் கொண்டிருந்த ஒரு புதிருக்கான விடை கணப் பொழுதில் தான் மனக்கணினியில் வந்து சென்றது போன்ற உணர்வு. சிந்தனை முழுவதையும் கிர்க்லேன்ட் பேஷ்புக்கில் செலுத்தத் தொடங்கினார்.

மார்க்கிற்கு ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. தான் பார்க்கும் எந்த ஒரு நபரையும் எதாவது ஒரு விலங்குடன் பொருத்திப் பார்ப்பது, பின்பு அதை நினைத்து நினைத்து சிரிப்பது அல்லது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கிண்டலடிப்பது. தான் கணினியில் திறந்திருந்த கிர்க்லேன்ட் ஹவுஸ் பேஸ்புக்கைப் பார்த்தவருக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. நம்மைப் போல் பலரும் மற்றவர்கள் முகத்தை கிண்டலடிக்க நினைப்பார்கள், அதனால் அனைவரது புகைப்படத்தையும் இணையத்தில் ஏற்றி அதன் அருகில் அவரைப் பற்றி எழுத சிறு இடம் கொடுக்க வேண்டும். ஒருவரது முகத்தைப் பார்க்கும் பொழுது என்னவெல்லாம் எழுதத் தோன்றுகிறதோ எழுதட்டும். அதனை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். நிற்க, ஒருவரது புகைப்படத்தை மற்றவர்கள் பார்க்கும் பொழுது "அழகாய் இருக்கிறாய்"," உன் முகம் இன்று பொலிவுடன் இருக்கறது" என்பது எழுதக் கூடாது. "உன் முகம் கொரில்லா போல் இருக்கிறது", "உன்னை விட காட்டெருமை கூட அழகாய் இருக்கும்" என்பது போன்ற வாசகங்களைத் தான் மற்றவர்கள் எழுத வேண்டும் என்று மார்க் நினைத்தார்.

                                       
ந்த எண்ணத்தை தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட மார்க் அவர்களின் விருப்பத்தையும் கேட்டார். இங்கு மார்க்கின் நண்பர்கள் சிறிது வேறுபட்டு நின்றார்கள். பேஸ்புக்கிற்கான ஆழமான சோதனையோட்டம் நடைபெற இருக்கிறது.

மார்க் தன்னுடைய எண்ணத்தை அறைத் தோழர்களுடன் பகிர ஆரம்பித்தார். முதலில் புகைப்படங்களைப் பதிவேற்றி படங்களுக்கு ஏற்ற விலங்கின் பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்த தன் எண்ணத்தை சிறிது மாற்றினார் மார்க், முதலில் எண்ணியது போல் படங்களுக்கு கீழ் பின்னோட்டம் இடாமல், ஒவ்வொரு படங்களையும் பல்வேறு விலங்குகளுடன் ஒப்பிட்டு, அதில் சிறந்த முகம் இருப்பது, அந்த படத்தில் இருக்கும் நபருக்கா இல்லை அந்த விலங்கிற்கா என்பது போல் மாற்றினார்! உதாரணத்திற்கு உங்களுக்கு பிடித்த/பிடிக்காத நண்பரை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள் அவருடைய படம் ஒரு பக்கமும் அதற்க்கு இணையாக மற்றொரு பக்கத்தில் ஒரு விலங்கும் இருக்கிறது இதில் உங்கள் வோட்டு யாருக்கு என்பதே விளையாட்டு, இதனை தன் நண்பர்களிடம் மார்க் பகிரும் பொழுதே அவர்கள் இந்த விளையாட்டை சிறிது மாற்றி அமைத்தார்கள். ஒட்டு மொத்த இணைய உலகமும் விளையாண்டு கொண்டிருக்கும் பேஸ்மேட்ச் தான் ஆனால் இதில் படங்களாக இடம் பெறப்போவது பிரபலங்கள் அல்ல ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தங்களுடன் பயிலும் மாணவர்கள்.
தைக் கேட்டதும் மார்க் உற்சாகமாகிவிட்டார். அடுத்த கட்ட வேலை எல்லாருடைய படங்களையும் சேகரிக்க வேண்டும், இரு படங்களை நீங்கள் ஒப்பிடும் பொழுது யாருக்கு உங்கள் ஓட்டை அளித்தீர்கள் என்பதை கணினிக்குப் புரிய வைக்க வேண்டும். ஒன்றின் பின் ஒன்றாக படங்களை வரவைக்க வேண்டும், அதிக ஓட்டுகள் பெற்றவரை அறிவிக்க வேண்டும் என்று மூளை அவரது உத்தரவுகளுடன் அடுத்த அடுத்த நகர்வுகளைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தது. நினைத்தாலே கொஞ்சம் மலைப்பாக இருக்கிறது இல்லையா, மார்க் இதை வடிவமைக்க எடுத்துக் கொண்ட நேரம் மிகக் குறைவே. கணினியுடன் கணினி மொழியில் பேசுவதற்கான வேலைக்கு ஆயத்தமானார். கிர்க்லேன்ட் ஹவுஸ் பேஸ்புக்கை அதிலிருந்து படங்களை தரவிறக்கம் செய்ய இயலாதவாறு வடிவமைத்து இருந்தார்கள்.ஆனால் மார்க்கோ அந்த பேஸ்புக்கில் இருக்கும் மொத்த படங்களையும் தரவிறக்கம் செய்வதற்கான கோடிங்கை சில நிமிடங்களில் எழுதி தரவிறக்கமும் செய்துவிட்டார். ஹாக்கிங்( திருடுதல்) என்றும் சொல்லாம். 




ஹார்வர்டில் மொத்தம் ஒன்பது விடுதி, ஒவ்வொரு விடுதியில் இருக்கும் படங்களையும் தான் இருந்த இடத்தில இருந்து தரவிறக்கம் செய்ய ஆரம்பித்தார், அதில் சில விடுதிகளின் பேஸ்புக்கில் நுழைய பிறவிடுதி மாணவர்களுக்கு அனுமதி இல்லை, அப்படிப்பட்ட விடுதிகளில் இருக்கும் புகைப்படங்களை தனக்குத் தெரிந்த நண்பர்கள் மூலம் தரவிறக்கம் செய்தார். படங்கள் அனைத்தும் தன கணினிக்கு வந்துவிட்டது, இனி செய்ய வேண்டியது எல்லாம் தான் நினைத்த மாதிரியான தளம் வடிவமைப்பது தான். அதையும் சில மணிநேரங்களில் செய்து முடித்தார். இங்கே மார்க் கவனிக்காமல் விட்ட சில விசயங்களே அவரை குற்றவாளியாக்கியது. அதற்குள் நுழையும் முன் பேஸ்மேஷுக்குள் நுழைந்து முழுவதையும் பார்த்துவிடுவோம். பேஸ்மேஷ் வடிவமைத்து முடித்ததும் அதனுடைய லின்க்கை தனது நண்பர்களுக்கு மெயில் மூலம் தெரிவித்துவிட்டு வேறுவேலைகளைப் பார்க்கக் கிளம்பிவிட்டார்.

சிலமணி நேரங்கள் கழித்து மீண்டும் வந்து தனது மடிக்கணியை தொடும் பொழுது தான் உணர்ந்து கொண்டார் மார்க், தான் செய்த மிகப்பெரிய தவறை. தவறு என்பதை விட மிகச் சிறந்த அனுபவம் என்றும் கொள்ளலாம். அந்த நிமிடம் அவரது கணினியை  தொடாமல் இன்னும் சில மணி நேரங்கள் அப்படியே வைத்திருந்தார் என்றால் நிச்சயம் அவரது கணினி வெடித்திருக்கும். அந்த அளவிற்கு சூடு ஏறி இருந்தது. சில நிமிடங்கள் மார்க்கிற்கு ஒன்றும் புரியவில்லை, கணினியைத் திறந்து பார்த்தவருக்கு மற்றுமொரு அதிர்ச்சி, நிச்சயமாக இது இன்ப அதிர்ச்சி, அவர் வெளியிட்டிருந்த பேஸ்மாஷிற்குக் கிடைத்திருந்த ஹிட்ஸ் தான் அவரது இன்ப அதிர்சிக்குக் காரணம். ஒன்றும் இல்லை அவர செய்தது ஒன்றே ஒன்று தான், தான் வடிவமைத்த தளம் எப்படி வேலை செய்கிறது என்று பார்பதற்காக தனது மூன்று நண்பர்களுக்கு அனுப்பி இருந்தார், பேஸ்மேஷ் விளையாட்டை விளையாடிப் பார்த்த நண்பர்களுக்கு மிகவும் பிடித்துப் போகவே அவர்கள் தங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அந்த லின்க்கை மெயில் அனுப்ப ஆரம்பித்துவிட்டனர், சிலமணி நேரங்களில் ஹார்வர்ட் பல்கலை கழகமே பேஸ்மேஷில் மூழ்கிவிட்டது, அதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் ஓட்டு போட்டுக் கொண்டிருந்தது தங்களுக்குப் பிடித்தவர்கள்/பிடிக்காதவர்கள் முகங்களுக்கு. யாரோ ஒருவரை இத்தனை காலம் பார்த்து ஓட்டு பழகியவர்களுக்கு தங்களுடன் படிக்கும் நடமாடும் விளையாடும் நண்பர்களைப் பார்த்ததும் ஆர்வம் வரமால் இருந்தால் தான் ஆச்சரியம்.

பேஸ்மேஷ் தளம் திறந்த சில மணி நேரங்களில் அதை விளையாடிய சில நூறு பேர்களின் மூலம் கிடைத்த ஹிட்ஸ் எவ்வளவு தெரியுமா இருபத்தி இரண்டாயிரம் ஹிட்ஸ். நினைத்துப் பாருங்கள் சில மணி நேரங்களில் இருபத்தி இரண்டயிராம் ஓட்டுகள் கிடைத்தது என்றால் மார்க் பேஸ்மெஷை எவ்வளவு நுட்பமாக செதுக்கி இருப்பார் மேலும் சற்றே நினைவு கூறுங்கள் அதை வடிவமைக்க எடுத்துக் கொண்ட கருப்பொருள் எவ்வளவு முக்கியமானது மற்றும் நுட்பமானது என்று. எல்லாம் சரி ஆனால் அவர் குற்றவாளி ஆனதற்கான காரணங்கள் வேண்டும் அல்லவா? 

பேஸ்மேஷ் தளத்தை தனது கணினியில் இயங்கச் செய்த மார்க் அதற்க்கு இவ்வளவு ஹிட்ஸ் வரும், குறிப்பிட்ட குறைந்த கால அளவில் இத்தனை பேர் விளையாடுவார்கள் என்று கனவிலும் அவர் நினைக்க வில்லை. ஒரு தளம் தடை இல்லாமல் இயங்க அதற்க்கு என்று சர்வர் வேண்டும், அதனை டெடிகேட் சர்வர் என்று சொல்வார்கள். ஆனால் மார்க் தனது வலைதளத்தை இயக்க உபயோகித்தது தனது மடிக்கணினியை அதனால் அது வேலை செய்ய திணறி மூச்சுமுட்டி உய்ரைவிடும் நிலைக்கு வந்துவிட்டது, சரியான நேரத்தில் மார்க் கணினியைப் பார்த்ததால் அது எரிந்து போவதில் இருந்து காப்பாற்றினார். அடுத்தது இணைய இணைப்பு. மொத்த ஹார்வர்ட் பல்கலைக் கழகமும் மார்க்கின் கணினியைத் தொடர்பு கொள்ளும் இணைய இணைப்பை எடுத்துக் கொண்டதால் வேறு யாராலும் வேறு எந்த வலை தளத்தையும் உபயோகிக்க முடியவில்லை நெட்வொர்க் ட்ராபிக் என்று சொல்லுவார்கள் அதாவது ஹார்வர்ட் இணைய இணைப்பே ஸ்தம்பித்துவிட்டது. அங்கு இருக்கும் மாணவர்கள் விரிவுரையாளர்கள் யாராலும் இணையத்தை உபயோகிக்க முடியவில்லை. 





மார்க் தனது வலைதளத்தை நிறுத்திய பின் தான் இணைய இணைப்பு சரி ஆகியது,இந்த இடைப்பட்ட நேரத்தில் ஹார்வர்டும் பிரச்சனைக்குக் காரணம் மார்க் தான் என்று கண்டறிந்துவிட்டது. அடுத்த பூதம் புகைப்படம் வடிவில் கிளம்பியது. பேஷ்மெஸ் மூலம் அதிக ஓட்டு பெற்றவரக்ள் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் ஹீரோ ஆனார்கள், ஆனால் ஜீரோ ஆனவர்கள் மத்தியிலோ மார்க் வில்லன் ஆனார். குறிப்பாக கறுப்பினத்தவர்களும் பெண்களும் பேஸ்மெஷ் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் எல்லாருமே மார்க்கிற்கு எதிராக கொடி பிடிக்க ஆரம்பித்தார்கள். கல்லூரி நிர்வாக படங்களை திருடிய குற்றம் மற்றும் இணைய இணைப்பை ஸ்தம்பிக்க வாய்த்த குற்றம் என்று மார்க் மீது குற்றங்களின் எண்ணிக்கை உயர்ந்தது, ஒழுங்கு நிர்வாகக் கமிட்டியின் முன்பு ஆஜராகும் படி மார்க்கிற்கு கடிதமும் வந்தது.

மிஸ்டர் மார்க் ஷக்கர்பெர்க், 

ல்லூரி நிர்வாகத்திற்கு சொந்தமான புகைப்படங்களை திருடிய குற்றத்திற்காகவும், அந்த படங்களை உங்கள் சொந்த உபயோகதிற்கு பயன்படுதியமைக்காகவும், கல்லூரி இணைய செயல்பாட்டை முடக்கி இயங்கவிடாமல் செய்தமைக்காகவும், தனிப்பட்ட நபர்களின் அனுமதி இல்லாமல் அவர்கள் புகைப்படங்களை விளையாட்டுப் பொருட்களாக மாற்றியமைக்காகவும் கல்லூரி நிர்வாகம் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முற்பட்டுள்ளது. கல்லூரி ஒழுங்குக் கமிட்டியின் முன்பு ஆஜராகி உங்கள் தரப்பை விளக்க வேண்டும் என்று நிர்வாகம் உத்தரவிடுகிறது. 
- ஹார்வர்டு பல்கலைக்கழகம்  

No comments:

Post a Comment