Wednesday, March 20, 2013

இராமநாதபுரத்தின் வீர மங்கை வேலு நாச்சியார் பற்றிய வரலாற்று தகவல் !!!

எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.
‘சக்கந்தி’’ இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.

வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டிதான். பத்து மொழிகள் தெரியும்.மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746_ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார்.

ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான். ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப். நேரம் பார்த்து நெருங்குவார் . சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல. போர்க்கலைகள் தெரிந்தவர். வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர்.

முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள். நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டார் நவாப்.

ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.

இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். ‘கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அங்கே போகக் கூடாது’ என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள்.

நாவபை வீழ்த்த ஹைதர் அலி உதவியை வேலு நாச்சியார்
நாடினார் :

வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். ‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன், அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம்.

தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது.

ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும். வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார். சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது.

விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது.

வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.
இராமநாதபுரத்தின் வீர மங்கை வேலு நாச்சியார் பற்றிய வரலாற்று தகவல் !!!

Wednesday, March 13, 2013

மாவீரன் அலெக்ஸ்சாண்டர்-இரும்புப்பறவை

கி.மு க்கு முன் 356 ஆம் ஆண்டு ஜூலை 20 ந்தேதி மாஸிடோனியாவில மன்னர் பிலிப்ஸ்க்கு மகனாக கிரேக்க மண்ணில் உதித்தது அலெக்ஸாண்டர் என்ற வீரக்குழந்தை. குழந்தை பிறந்த நேரம் பிலிப்ஸ் மன்னன் அகமகிழ்ந்தான் காரணம் அதே நேரம்தான் பிலிப்ஸின் ராசியான குதிரை ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றிபெற்றிருந்தது. அலெக்ஸாண்டர் இந்த உலகை கட்டி ஆள்வான் என்று அரச சோதிடர்கள் கணித்து சொன்னதும் மன்னன் பிலிப்ஸின் மகிழ்ச்சிக்கு காரணம்.

பிறந்ததிலிருந்தே அலெக்ஸாண்டரிடம் அறிவுக்கூர்மையும் அதீத வீரமும் குடிகொண்டிருந்தன. அலெக்ஸாண்டர் சிறுவயதாக இருந்தபோது நடந்த சம்பவம் இது. தன் தந்தை பிலிப்ஸ் சிலிரியா நாட்டில் படையெடுப்பு நடத்திக்கொண்டிருந்தபோது மாசிடோனியாவில் படைவீரர்கள் சில கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்வதை பார்த்த அலெக்ஸாண்டர் நீதிமன்றத்திற்குள் நுழைந்தார். அங்கே அந்த கைதிகள் புரட்சியில் ஈடுபட்டதாக கூறி அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட்து. இளவரசன் அலெக்ஸாண்டர் நீதிபதியைப் பார்த்து நான் ஏதாவது சொல்லலாமா என்று கேட்டார் இளவரசன் என்பதால் நீதிபதியும் இணங்கினார்.

அலெக்ஸாண்டர் கைதிகளுக்கு ஆளுக்கொரு கத்தியைக் கொடுத்து சிலிரியாவில் அரசர் பிலிப்ஸ் யுத்தத்தில் இருக்கிறார் அந்த யுத்தத்தில் பங்கெடுத்து நீங்கள் போரிட்டால் உங்களுக்கு விடுதலை. மரணவாயிலிருந்து தப்பிய கைதிகள் அலெக்ஸாண்டர் சொன்னபடியே போரில் கலந்துகொள்ளச் சென்றனர். உயிர் விலை மதிப்பற்றது அதனை இழப்பதென்றால் அது தேசத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று தனது தீர்ப்புக்கான காரணத்தை விளக்கினார் அலெக்ஸாண்டர் நீதிபதிகளுக்கே இந்த நீதியைச் சொன்னபோது அலெக்ஸாண்டருக்கு வயது என்ன தெரியுமா? வெறும் ஏழுதான்.

அலெக்ஸாண்டரின் புத்திக்கூர்மையை பறைசாற்ற இன்னொரு சம்பவம் வரலாற்றிலேயே மிக புகழ்பெற்ற குதிரையின் பெயர் ஃபுசிபேலஸ் எல்லா வித்தைகளையும் அறிந்த அந்த குதிரை பிலிப்ஸ் மன்னனிடம் விற்கப்பட்டது. அந்த குதிரை யாருக்குமே அடங்காமல் திடலில் குதித்துக் கொண்டிருந்தது. உன்னால் முடியாது வேண்டாம் என்று மன்னர் பிலிப்ஸ் எவ்வளவோ தடுத்தும் அதனை தாம் அடக்குவதாக கூறி களம் இறங்கினார் அலெக்ஸாண்டர். குதிரை தன் நிழலையே பார்த்து மிரல்கிறது என்று சில நொடிகளில் புரிந்துகொண்ட அலெக்ஸாண்டர் சூரியனை நோக்கி குதிரையை திருப்பினார். குதிரையை மிரட்சியை மறந்து அமைதியானது கூடியிருந்தவர் அலெக்ஸாண்டரின் புத்திக்கூர்மையை கண்டு வியந்தனர்.

மிகவும் பிடித்துப்போனதால் அந்தக் குதிரையையே தனது சொந்தக் குதிரையாக்கிக்கொண்டார் அலெக்ஸாண்டர். அவரது இறுதிகாலம் வரை கூடவே இணைந்திருந்தது ஃபுசிபேலஸ் அதனால்தான் வரலாற்றிலேயே ஆக புகழ்பெற்ற குதிரை என்ற பெயர் அதற்கு கிடைத்தது.

உலகம் இதுவரை கண்டிருக்கும் மிகப்பெரிய சிந்தனைச் செப்புகளுள் ஒருவரான அரிஸ்டாடிலை தனது 13 ஆவது வயதில் ஆசிரியராக பெற்றார் அலெக்ஸாண்டர். என்னிடம் மாணவனாகும் தகுதி உனக்கு இருக்கிறதா என்று அரிஸ்டாடில் அலெக்ஸாண்டரை கேட்க அதற்கும் சற்றும் சளைக்காமல் எனக்கு ஆசியரியராகும் தகுதி உங்களுக்கு உள்ளதென்றால் உங்களுக்கு மாணவனாகும் தகுதி எனக்கும் உள்ளது என்று பதில் கூறினார் அலெக்ஸாண்டர்.

ஒரு உலகாளும் கர்வம் அலெக்ஸாண்டரின் கண்களில் தெரிவதை கவணித்த அரிஸ்டாடில் நூற்றுக்கணக்கான நுணுக்கங்களை அவருக்கு கற்றுக்கொடுத்தார். கி.மி 336 ஆம் ஆண்டு மன்னன் பிலிப்ஸ் கொலை செய்யப்பட்ட பிறகு தனது 20 ஆவது வயதில் அரியனை ஏறினார் அலெக்ஸாண்டர். அடுத்த 13 ஆண்டுகளில் துருக்கி, எகிப்து, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பல் நாடுகளை தன் காலடியில் கொண்டு வந்தார். அவரின் கடைசி ஆண்டுகளில் அவரது கவணம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. இந்து சமவெளியை கடந்து பஞ்சாப் மன்னன் ஃபோரஷை கடுமையான போருக்குப்பின் முறியடித்தார் அலெக்ஸாண்டர்.

பின்னர் ஃபோரஷிடம் உங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று அலெக்ஸாண்டர் கேட்க ஒரு மன்னனைப்போல் நடத்த வேண்டும் என்று ஃபோரஷ் கூறினார். உடனே தான் கைப்பற்றிய தேசத்தை அவரிடமே ஒப்படைத்து அதனை மாசிடோனியாவின் பாதுகாப்பு உட்பட்ட தேசமாக அறிவித்தார் நன்னெஞ்சம் கொண்ட அலெக்ஸாண்டர். இந்த கால கட்டத்தில்தான் அவரின் வெற்றிகளுக்கெல்லாம் உறுதுனையாக இருந்த ஃபுஸிபேலஸ் குதிரை இறந்து போனது. அந்த துக்கத்தில் ஒருவாரம் உணவே இல்லாமல் அலெக்ஸாண்டர் துவண்டு கிடந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. அதன் பின்னரும் சில வெற்றிகளை குவித்தார் அலெக்ஸாண்டர்.

5 ஆண்டுகள் தொடர்ந்து போரிட்ட களைப்பிலும் 12 ஆயிரம் மைல்கள் கடந்து வந்த சோர்விலும் அடுத்து ஒரு படி அடியெடுத்து வைக்கமாட்டோம் என்றனர் அலெக்ஸாண்டரின் படை வீரர்கள். தன் படையின் பலமே தனது பலம் என்பதை உணர்ந்த அலெக்ஸாண்டர் தனது இலக்குகளை சுருக்கிகொண்டு பாபிலோன் நகர் திரும்புமாறு தனது படைக்கு உத்தரவிட்டார். பாபிலோன் திரும்பிய சில நாட்களில் ஒரு மாபெரும் விருந்தில் கலந்துகொண்டார் அலெக்ஸாண்டர். அந்த விருந்து நடந்த மூன்றாம் நாள் அதாவது கி.மு 323 ஆம் ஆண்டு ஜூன் 10 ந்தேதி தனது 33 ஆவது வயதில் காலமானார் மாவீரன் அலெக்ஸாண்டர். விருந்தில் அவருக்கு விஷம் வைக்கப்பட்டது என்று சில வதந்திகள் பரவின. அவர் உண்மையிலேயே விஷத்தால்தான் மாண்டாரா என்பதை சரித்திரத்தால் துல்லியமாக கூற முடியவில்லை.

இந்த உலகமே தனக்கு போதாது என்றவனுக்கு ஆறடி நிலமே போதுமானதாக இருந்தது என்று அலெக்ஸாண்டரை வருணிக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து அலெக்ஸாண்டர் பேராசைக்காரன் என்ற பொருளை அந்த வரிகள் தந்தாலும் நாம் அந்த மாவீரனின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும் அவர் ஒட்டுமொத்த உலகையும் வெல்ல நினைத்தது உண்மைதான். ஆனால் வெற்றிகள் பல குவிந்தபோதும் அலெக்ஸாண்டர் அகம்பாவமோ ஆணவமோ கொள்ளவில்லை. மாறாக தான் கைப்பற்றிய தேசங்களையும் மன்னர்களையும் வீரர்களையும் கன்னியமாக நடத்தினார் என்றுதான் வரலாறு கூறுகிறது.