Monday, April 29, 2013

சே குவேராவின் உருக்கமான இறுதிக் கடிதம் !!

சே குவேரா எழுதிய இறுதி மடலின் தமிழ் வடிவம் -
ஃபிடல்.., இந்த நேரத்தில் எனக்குப் பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோனியாவின் வீட்டில் சந்தித்தது; உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது; புறப்படத் தயாரானபோது நமக்கு ஏற்பட்ட பரபரப்பு.

நடக்க இருக்கும் விபரீதம் எனக்கு எப்போது புரிந்தது தெரியுமா? நீங்கள் இறந்துபோனால் யாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு நாள் அவர்கள் வந்து கேட்டார்கள். பிறகு, எல்லாம் புரிந்துவிட்டது. ஒரு புரட்சியின் முடிவு, வெற்றி அல்லது வீரமரணம் என்பதைப் புரிந்துகொண்டேன்.

இன்று, நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோம். அன்று போல் இல்லாமல் பக்குவப்பட்டிருக்கிறோம். ஆனால், கடந்த காலம் மீண்டும் திரும்புகிறது. க்யூப மண்ணில் நிகழ்ந்த க்யூபப் புரட்சியில், எனக்கு அளிக்கப்பட்டிருந்த கடமைகளை நான் நிறைவேற்றிவிட்டேன் என்று நினைக்கிறேன்.

ஆகையால், நான், உங்களிடமிருந்தும் நமது தோழர்களிடமிருந்தும், என்னுடைய க்யூப மக்களிடமிருந்தும் விடைபெறுகிறேன்.

கட்சியின் தலைமையில் என்னுடைய பொறுப்புகளிலிருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும், மேஜர் பொறுப்பிலிருந்தும், க்யூபாவின் பிரஜைக்கான உரிமையிலிருந்தும் நான் விலகுகிறேன். இனி, எனக்கு க்யூபாவுடன் சட்ட ரீதியான எந்த உறவும் இல்லை. ஆனால், வேறு வகையில் பிணைப்புகள் உள்ளன. நிச்சயமாக அவற்றை என்னால் உதறித்தள்ள முடியாது.

கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும்போது, புரட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த, நான் நேர்மையாகவும் அர்ப்பணிப்போடும் செயல்பட்டு வந்தேன் என்றே நம்புகிறேன். நான் செய்த ஒரே தவறு என்ன தெரியுமா? சியாரா மிஸ்த்ரா மலைத்தொடரில் கழித்த முதல் சில தினங்களில் உங்கள் மீது மேலும் அதிக நம்பிக்கை வைக்காதது. ஒரு புரட்சியாளராக, ஒரு தலைவராக பரிமணித்த உங்கள் குணாதிசயங்களை உடடியாகப் புரிந்துகொள்ள தவறியது.

கரீபிய சிக்கல் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்த அந்த சோகமான, ஆனால் துடிப்பு மிக்க காலகட்டத்தில், உங்களுடன் சேர்ந்து, நமது மக்களின் பக்கம் நின்ற தருணத்தை இன்றும் பெருமையுடன் உணர்கிறேன். உங்களைப் போல் ஒரு தலைவர் செயல்படுவது அபூர்வமானது. உங்களை தயக்கம் இன்றி பின்பற்றியதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் வேறு சில நாடுகளுக்குத் தேவைப்படுகிறது. க்யூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால் உங்களுக்கு மறுக்கப்பட்டதை என்னால் செய்ய முடியும் என்று நம்புகிறேம்.

ஆக, நாம் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஒரு பக்கம் மகிழ்ச்சியோடும் மறு பக்கம் துயரத்தோடும் நான் என் பயணத்தை மேற்கொள்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். என் நேசத்துக்குரிய மக்கள் ஒரு சிறப்பான சமுதாயத்தை கட்டி எழுப்புவார்கள் என்ற என் நம்பிக்கையை இங்கே விட்டுவிட்டு பிரிகிறேன். புதிய போராட்டக் களங்கள் காத்திருக்கின்றன.

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பேன். ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதை புனித கடமையாக மேற்கொள்வேன். அதை நிறைவேற்றவும் செய்வேன். இதுதான் என்னுடைய பலத்துக்கு ஆதாரமாக இருக்கிறது.

எங்கோ, கண் காணாத இடத்தில் முடிவு என்னை நெருங்குமானால், அந்தக் கடைசி தருணத்தில் க்யூப மக்களையும், குறிப்பாக உங்களையும்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.

எனக்கு கற்றுக்கொடுத்ததற்கும் அதற்கு நீங்களே ஒரு உதாரணமாக விளங்கியதற்கும் என் நன்றி. என்னுடைய செயல்களின் விளைவுகள் உங்கள் நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்காமல் இருக்க முயல்வேன். நமது புரட்சியின் அயல்நாட்டு கொள்கையோடு எப்போதும் அடையாளம் காணப்பட்டவன் நான். இப்போதும், அது தொடர்கிறது. நான் எங்கு இருந்தாலும், ஒரு க்யூபப் புரட்சியாளனின் பொறுப்புணர்வோடு இருப்பேன்.

எனது மனைவி, மக்களுக்கு எந்த சொத்தையும் நான் விட்டுச் செல்லவில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. உண்மையில் எனக்கு மகிழ்ச்சிதான். அவர்கள் வாழ்வதற்கு தேவையானவற்றை கவனித்துக்கொள்வதற்கும், குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்கும் ஓர் அரசாங்கம் இருக்கிறது.

இன்னும் பல விஷயங்களை உங்களிடமும், நமது மக்களிடமும் சொல்ல விருப்பம். ஆனால் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நான் சொல்ல விரும்புவதை வெளிப்படுத்தும் சக்தி வார்த்தைகளுக்கு இல்லை. காகிதங்கள் வீணாவதைத் தவிர வேறு பயன் ஏதும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

நமது முன்னேற்றம் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம்.

என் முழுமையான புரட்சிகரமான உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத் தழுவிக்கொள்கிறேன்.

சே.
1965-ம் ஆண்டு மத்தியில், க்யூபாவிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு சே ஃபிடலுக்கு எழுதிய கடிதம்.இது போன்ற பல நல்ல வரலாற்று தகவல்களை இன்று ஒரு தகவலுக்கு அனுப்பி கொண்டு இருக்கும் நண்பர்களுக்கு எனது நன்றியே தெரிவித்து கொள்ளுகிறேன்

நன்றி

Thursday, April 18, 2013

சே குவேரா - ஒரு மாவீரன்

உலக சரித்திரத்தில் பெயர்பெற்றவர்களில் சே குவேரா முக்கிய இடத்தில் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு மாவீரன் ஜாதி, மத, இன,மொழி, நிற, பேதங்களுக்கு அப்பாற்பட்டவர். எல்லோரையும் மனிதர்களாக தான் பார்த்தார்.அப்படியே வாழ்ந்தார். எனக்கும் சே குவேராவை ரெம்ப பிடிக்கும் .

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) ஜுன்14,1928, அக்டோபர்-9, 1967(அர்ஜெண்டினா பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்கு கொண்ட போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.
மார்க்ஸியத்தில் ஈடுபாடு
மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார். இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாட்டமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது.
கியூபாவில் புரட்சி
சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடம் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடி போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.
பொலிவியாவில் சேகுவேரா
பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் அக்டோபர் 9-1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்கு பெற்றவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)
அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தான். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார்.
தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று !!!! மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.
இளமைக்காலம்
சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் அர்ஜெண்டினாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய ,பாஸ்க்கு,ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.
வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு “பன்றி” என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.
தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.
குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ்,போல்க்னா,கைடே,சல்காரி,வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா,காமுஸ்,லெனின் போன்றவர்களது நூல்களையும், ஏங்கெல்ஸ்,வெல்ஸ்,புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு லத்தீன் அமெரிக்
எழுத்தாளர்களானகுயிரோகா,அலெக்ரியா,இக்காசா,டாரியோஆஸ்ட்டுரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர் அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.
1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவன்ஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி “மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.
1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலிவியா,பெரு,ஈக்குவிடார்,பனாமா,கொஸ்தாரிக்கா,நிக்கரக்குவா,ஹொண்டுராஸ், சல்வடோ ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ்குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.
குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே “சே” என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்

Friday, April 12, 2013

ஹிட்லர்-Adolf Hitler..!!!!

Adolf Hitler, ஜனவரி 20, 1889- ஏப்ரல் 30 ,1945) ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்துக்கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால்[2] சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார்.

கல்வி
தொடக்கத்தில் ஹிட்லர் கல்வியில் சிறந்து விளங்கினார். ஆறாவது வகுப்பு படிக்கும் சமயத்தில் கல்வியில் சிறிது தொய்வு ஏற்பட்டது அதன் காரணமாக அவ்வகுப்பில் தேர்ச்சி பெறாமல் மீண்டும் அதே வகுப்பில் சேர்ந்து படித்தார். இவர் கல்வியில் நாட்டமில்லாமையை கண்டு இவன் உழைப்பதில் ஈடுபாடுகொண்டவனல்லன் என்று ஆசிரியர்கள் இவர் பெற்றோருக்கு சுட்டிகாட்டினர். இவர் படித்த பள்ளியில் இவர் வயதுடைய (20 ம் நூற்றாண்டின் மிகப்பெரிய தத்துவ்வியலாளரான) லுட்வக் விட்ஜென்ஸ்டின் இவரைவிட இரண்டு வகுப்பு கூடுதலான வகுப்பில் படித்தார். இருவரும் ஓருவரையொருவர் சந்தித்ததேயில்லை.

ஒவியராதல்
ஹிட்லர் தன் படிப்பில் ஏற்பட்ட மந்த நிலையை தன் தந்தையின் கொடுமைக்கு கொடுத்த பரிசாகவும் தன் தந்தை தான் அவரைபோன்று சுங்க அதிகாரி பணியில் அமரவேண்டும் என்ற கனவை பொய்யாக்கிய திருப்தி கிடைத்ததாக தன் சுயசரிதையில் ஹிட்லர் விளக்கியுள்ளார். இதனால் அவர் ஒவியராகும் கனவை மெய்ப்பித்தாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய தந்தை 3 ஜனவரி, 1903 அன்று மரணமடைந்தார். அதன் பின் அவருடைய கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. ஹிட்லர் தம் 16 ம் வயதில் உயர் நிலை பள்ளி படிப்பை டிப்ளாமா பட்டம் பெறாதநிலையில் நிறுத்திக்கொண்டார்.

அடால்ப் ஹிட்லர் பெயர்க்காரணம்
அடால்ப் என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள (Nobility) + ஒநாய் (wolf) என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த ஹிட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார். அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். 1920 களில் அவரை அப்படித்தான் அழைத்தனர். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி (Adi) என அழைத்தனர். ஹிட்லர் ன்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள், காப்பாளர் என்றும் பொருள்படும்.

வறுமையில் வாழ்தல்
ஹிட்லர் 1905 ம் ஆண்டு முதல் நாடோடித்தனமான வாழ்க்கையை வியன்னாவில் தன் தாயுடன் வாழந்தார். தன் தாய்க்குக் கிடைத்த ஆதரவற்றோர் உதவித்தொகையே குடும்ப வருமானம். இந்நிலையில் இரண்டுமுறை வரைபடவரையத் தகுதியில்லையென்று, வியன்னாவின் வரைவாளர் நுண்கலைக்கழகம், (Academy of Fine Arts Vienna) அவரை நிராகரித்தது. அவர் படைப்புகள் கவர்ச்சியூட்டுவதாகவும் மற்றும் கட்டுமான தொழிலுக்கு பொருத்தமானதாகவும் இல்லையென்று அங்கீகரிக்க மறுத்தது. 21 டிசம்பர், 1909 அவருடைய தாய் தன்னுடைய 47 வயதில் மார்பக புற்று நோய் தாக்கத்தால் மரணமடைந்தார். ஹிட்லர் ஆதரவற்றோர் உதவித்தொகையை வைத்துக்கொண்டு தன் தங்கையுடன் மிகவும் வருமையில் வாழும் சூழல் ஏற்பட்டது. ஹிட்லர் 21 ம் அகவையில் தன் மரபுவழி சொத்துக்களால் கிடைத்த சிறு தொகையுடன் வரைவாளராக வியன்னாவில் வறுமை வாழக்கையுடன் போராடினார். அஞ்சல் அட்டையில் வரும் படங்களை மாதிரியாக வைத்து வரைந்த ஒவியங்களை வணிகர்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும் விற்று வரும் பணத்தில் குடும்ப வறுமையை ஒரளவு குறைத்தார்.

இட்லரின் யூத எதிர்ப்பு
வியன்னாவில் இவர் மட்டுமே யூதவைரியாக (Anti-Semite) இருந்தார் என்பதை அவருடைய சிறு வயது நண்பரான அகஸ்ட் குபிசெக் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். வியன்னாவில் பெரும்பான்மையோர் யூதர்கள். புராதான யூதர்களும் அதிகமிருந்தனர். வியன்னாவில் வகுப்புவாத கலவரங்கள் அதிகமிருந்தன.

புராட்டஸ்தாந்து சமய ஈடுபாடு
ஹிட்லர் யூதப் பகைமை கருத்தாய்வு நூல்களை அதிகம் விரும்பினார். போல்மிக் மற்றும் மார்ட்டின் லூதரின் யூத எதிர்ப்பு நூல்களை அதிகம் விரும்பினார். கிறித்தவ சமயத்தின் ஒரு பிரிவான புராட்டஸ்தாந்து சமயத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் மார்ட்டின் லூதர் எழுதிய யூதர்களும் அவர்களின் பொய்மையும் (On the Jews and their Lies) என்ற நூலே யூதர்கள் மேல் வெறுப்புடன் செயல்பட பின்புலமாக அமைந்தது என்று ஹிட்லர் ன் மெயின் கேம்ப் நூலில் விவரித்துள்ளார்.

ஆரியக் கோட்பாடு
ஆரியக் கோட்பாட்டுக்கு (Aryan Race) தடையாகவும், எதிரிகளாகவும் இருப்பவர்கள் யூதர்களே. ஆஸ்திரியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு காரணம் யூதர்களே என்று பகிரங்கமாக வெளியிட்டார். யூதப்பகைமையாளரிடம் மார்க்சிசமும், சோசலிசமும் அதனை வழிநடத்தும் யூததலைவர்களால் கலக்கப்பட்டதை கண்டுணர்ந்தார். அதன் விளைவாகவே முதலாம் உலகப்போரில் ஜெர்மனி யூதர்களிடம் வீழ்ந்தது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தினார். யூதர்களால் ஜெர்மனி அதன் உன்னதத்தை இழந்தது.

இராணுவத்தில் பணிபுரிதல்
இட்லருடைய தந்தைவழி சொத்துக்களின் கடைசி பங்கு கிடைத்தவுடன் ஜெர்மனியின் பாரம்பரிய நகரமான முனிக் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு குடிபெயர்ந்த்து இன்னுமொரு காரணமும் இருந்த்து. ஆஸ்திரிய இராணுவத்தில் பணிபுரிவதை தவிர்க்கவே ஆனால் எதிர் பாராதவிதமாக ஆஸ்டிரிய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் உடல் தகுதி தேர்வில் தோல்வியுற்றதால் முனிச் நகருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும் 1914 ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில் பங்கெடுப்பதால் அதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து மூன்றாம் லுட்விக் அரசரிடம் பல்வேரியா இராணுவப்பிரிவிற்காக மனு செய்தார். அதற்கு அனுமதி கிடைத்து பல்வேரிய இராணுவப்பிரிவில் சேர்ந்தார்.

முதல் உலகப்போரில் ஹிட்லர்
பவேரியன் இராணுவப்பிரிவில் ஹிட்லர்
ஹிட்லர் 16 வது பவேரியன் ரிசர்வ் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். பல் ஆபத்தான சவால்களை சமாளித்து தப்பிக்கும் சாதுர்யம்படைத்தவராக மேற்கு முன்னணியிருக்காக தாக்குதல் புரிந்தார். பல நேரங்களில் எதிரித்தாக்குதலுக்குள்ளாகிபடுகாயம் அடையவும் நேரிட்டது.
குழந்தைகளின் கொடூரக்கொலை தாக்குதல்
1914 ஒய்பெர்ஸ் (Ypers) சண்டையில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தார்.

இந்த போரில் கிட்டத்தட்ட 40000 குழந்தைகள் கொல்லப்பட்டனர். இந்த போர் பைபிளில் கூறப்படும் வாசகமான குழந்தைகளின் கொடூரக்கொலை (Massacre of Innocents) என்று விமர்சிக்கப்பட்டது. இந்த கொடூரக்கொலை 9 காலாட்படையினர் இட்லருடன் சேர்ந்து 20 நாளில் நடத்தி முடித்தனர். இதன் மூலம் ஹிட்லர் விமர்சித்து பேசப்பட்டார் ஆகையால் தொடர்ந்து வந்த போர்களில் ஈடுபடவில்லை. என்று ஜான் கீகன் எனும் பிரித்தானிய வரலாற்றியலாளர் குறிப்பிட்டுள்ளார். இரண்டுமுறை ஹிட்லர் இராணுவத்தின் சிறப்பான பணி மேற்கொண்டமைக்காக எஃகு சிலுவை இரண்டாம் வகுப்பு (Iron Cross II Class), எஃகு சிலுவை முதலாம் வகுப்பு (Iron Cross I Class) பதக்கங்களைப் பெற்றார்.

தற்காலிகமாக பார்வையிழத்தல்
15 அக்டோபர் 1918 ஹிட்லர் நச்சுக்காற்றுக் குண்டு தாக்கியதில் தற்காலிகமாக பார்வையிழந்த நிலையில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் இந்த பார்வையிழப்பின் பக்கவிளைவாக ஒழுங்குலைந்த மனநிலை (பின்னாளில் இது இஸ்டிரியா எனப்பெயர்) ஏற்படும் என்று தெரிவித்தார். அந்த சூழ்நிலையிலும் அதைரியப்படாமல் ஜெர்மனியை காப்பாற்றுவதற்காக என் உயிர் போனாலும் கவலையில்லை என்று அவரே சமாதனம் செய்துகொண்டார். அவர் மனது முழுக்க யூதர்களை ஒழிப்பதிலேயேயிருந்த்து என்று ஆய்வியலாளர் லூசி தாவிட்ஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஹிட்லர் ஜெர்மன் நாட்டையும், தேசபற்றையும் அதிகம் நேசித்தார் இத்தனைக்கும் 1932 வரை ஜெர்மன் குடிமகனாக மாறவில்லை. (பிறப்பால் ஆஸ்டிரியன்) அதனாலேயே சில பதவிகள் கைவிட்டுப்போயின.

வெர்செயில் ஒப்பந்தத்தின் விளைவு
ஹிட்லர் 1918 ம் ஆண்டு ஜெர்மனி சரணைடைந்தது என்ற செய்தி கண்டு அதிர்ச்சியடைந்தார். ஜெர்மனி இன்னும் போர்முனையில் இருக்கும் நிலையில் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டது ஏன் என்ற பின்னணியில் மார்க்சிய கொள்கையாளர்களும், மக்கள் தலைவர்களும் ஹோம் பிரண்ட் (Home Front) அணியினருக்கு ஆதரவாக உள்ளனர் என்ற உண்மையை தெளிவு படுத்தினார். இந்த செயல் புரிந்த அமைப்பினரை பின்னாளில் நவம்பர் குற்றவாளிகள் (November Criminals) என அழைத்தனர். இந்த ஒப்பந்தத்தால் ஜெர்மனி அதன் தரமிழந்தது. ஜெர்மனியின் படைக்குறைப்பையும் படை விலக்கலையும் வலியுறுத்தியது. ரைன்லேன்ட் நகரில் நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மனியப் படைகள் திரும்பப் பெறப்பட்டன.
படைக்குறைப்பு

ஜெர்மானியர்களால் பாதிக்கப்பட்ட போலந்தை புணரமைக்க வலியுறுத்தப்பட்டது. இவ்வளவு பேரிழப்பும் ஜெர்மனியின் போரினாலேயே ஏற்பட்டது இதற்கு ஜெர்மானியர்களே காரணம் என்று நிர்பந்திப்பதை பிரித்தானிய வரலாற்று இயலாளர் ஜான் கீகன் (John Keegan) மறுத்தார். ஐராப்பிய நாடுகள் அனைத்துமே நாடு பிடிக்கும் ஆசையால் படைக்கலன்களை பெருக்கி இப்போரில் இறங்கின, ஜெர்மனியின் பங்கு சிறிதளவே என்று தெளிவு படுத்தினார். இருப்பினும் வஞ்சகமாக இதை ஆரம்பித்தது ஜெர்மனிதான் என்று ஹோம் பிரன்ட் அணியினர் குற்றஞ்சாட்டினர். போரினால் ஏற்பட்ட இழப்பீடுகளை ஒப்பந்தத்தில் பிரிவு 231 ல் ஜெர்மனியின் நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ளபடி ஜெர்மனிதான் ஈடுசெய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஜெர்மனி எவ்வளவு படைக்கலன்கள் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை குறிப்பிட்டு அதன்படி அனுமதிக்கப்பட்ட படைக்கலன்களின் எண்ணிக்கைப்படி ஜெர்மனியின் முழுபடைப்பிரிவும் படைக்குறைப்புக்கு ஆளாகியது.
வெர்செய்ல் ஒப்பந்தம் ஜெர்மனி நாட்டின் பாதுகாப்புக்கு அனுமதித்த படைக்கலன்கள்:
காலாட்படை -1,00,000
கப்பலகள் -6 மட்டுமே
நீர்முழுகி கப்பல் -அனுமதியில்லை
ஆயுதம் தாங்கி -வாகானான்கள் அனுமதியில்லை
நாசிசத்திற்கான காரணங்கள்
ஹிட்லர் பின்வரும் இரண்டு காரணங்களால் மட்டுமே ஜெர்மனியில் நாசிசத்தை உருவாக்கவும் ஆட்சியில் அமரவும் காரணமாயிற்று. இட்லரும் அவரது கட்சினரையும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட தேவையில்லாமல் நவம்பர் குற்றவாளிகளினால் அழைக்கப்பட்டனர். ஜெர்மனியின் வளர்ச்சியில் ஹிட்லர் அதிக அக்கறை காட்டுவதால் அதை தடுக்கவும், பாரிஸ் அமைதி பேச்சுவார்த்தையில் இவரை நவம்பர் கிரிமினல்கள் பலியாடாக ஆக்கி கையொப்பமிட வைத்தனர். முதலாம் உலகப்போரின் முடிவில் வெர்செயில் ஒப்பந்தம் நிறைவேறியது.

அரசியலில் நுழைவு
ஹிட்லர் முதலாம் உலகப் போருக்குப்பின் இராணுவத்தில் தான் இருந்தார் பின் முனிச் நகருக்குத் திரும்பினார். பவேரியன் பிரதமர் கொல்லப்பட்டபின் பல மாறுபட்ட எண்ணங்களுடன் அவர் செயல்பாடுகள் அமைந்தன. 1919 ல் ஹிட்லர் இராணுவ உளவாளியாக ரெய்ச்வேரில் நியமிக்கப்பட்டார். உடன் பணியாற்றிய வீரர்களின் ஆதரவால் அங்கு ஏற்படுத்திய ஒரு சிறு குழுவின் மூலம் ஜெர்மன் தொழிலாளர் கட்சி ஆன்டன் டிரக்ஸ்லரால் உருவாக்கப்பட்டது. அவர்களின் யூதபகைமை, தேசியவாதம், முதலாளித்துவ பகைமை, மார்க்சிய பகைமை போன்ற உணர்வுகளால் ஹிட்லர் பெரிதும் கவரப்பட்டார்.ஆன்டன் டிரக்ஸ்லரும் இட்லரின் சாதுர்யமான, திறமையான பேச்சாற்றலால் கவரப்பட்டார். அவரை கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். அதன்பொருட்டு ஹிட்லர் 56வது உறுப்பினராக அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.

இட்லரின் பேச்சாற்றல்
கட்சியின் 7 வது பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார். ஆண்டுகள் ஆக கட்சியினரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தேசிய பொதுவுடைமை ஜெர்மன் தொழிலாளர் கட்சியாக உருமாறியது. கட்சிப் பணியில் தன் முழுக்கவனத்தையும் செலுத்துவதற்காக 1920ல் ஹிட்லர் இராணுவப்பணியை கைவிட்டார். தன் பேச்சுத்திறமையை கட்சி செயல்வீரர்களுக்கு பயிற்றுவித்தார். இதனால் கட்சியிலும் அவர் செல்வாக்கு உயர்ந்த்து. விரைவிலேயே கட்சித் தேர்தலில் 543 வாக்குகள் பெற்று கட்சித் தலைவர் ஆனார். எதிர்த்து வாக்களித்தவர் ஒருவர் மட்டுமே. 29 ஜூலை, 1921 ஹிட்லர் கட்சியின் ஃபியூரராக முதல் முதலாக அந்த வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டு அதன்படி அழைக்கப்பட்டார்.

Wednesday, April 3, 2013

மாவீரன் மருதநாயகம் (கமாண்டோ கான் )

1724இல் இராமநாதபுரம் பனையூரில் மருதநாயகம் பிள்ளையாகப் பிறந்து முகமது யூசுப் கானாக வளர்ந்து கமாண்டோ கானாக உயர்ந்தவன். மதுரை மக்களால், “கமாந்தோ கான்’’ என அன்பாக அழைக்கப்பட்டவன். இந்துவாகப் பிறந்து, கிறிஸ்துவர்களிடம் கல்விப் பயின்று இஸ்லாமியனாக இறந்தவன். 40 வயதே வாழ்ந்தாலும் நாடறிந்தவனாக மட்டுமல்ல இந்திய வரலாற்றில் சிறந்தப் போர் வீரனாக, இராணுவ நிபுணனாக, தன்னை நிலைநிறுத்திக் கொண்டவன் கமாந்தோ கான். இந்திய இராணுவ வரலாற்றில் ஹைதர் அலியும், முகமது யூசுப் கானும் குறிப்பிடத்தக்கவர்கள். ஹைதர் அலி வேகத்திற்கு புகழ்பெற்றவர் என்றால், முகமது யூசுப்கான் விவேகத்துடன் தாக்குதலில் சிறந்தவன். ஆற்காட்டு நவாபும், கிழக்கிந்திய கம்பெனியும் பாளையக்காரர்களை அடக்கிட யூசுப் கானை முழமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

பனையூரில் இருந்த இல்லத்துப் பிள்ளைமார்களின் பல குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின, மருதநாயகத்தின் குடும்பமும் அதில் ஒன்று. கட்டுக் கடங்காமல் சுற்றித்திறிந்த யூசுப்கான் பாண்டிச்சேரிக்கு வந்து அன்றைய பிரெஞ்சு கவர்னர் மான்சர் காக்லா வீட்டில் வேலைக்காரனாகச் சேர்ந்தான். சில காலம் கழித்து வேலையிலிருந்து விலகி அல்லது நீக்கப்பட்டு தஞ்சைக்கு சென்று படைவீரனாகச் சேர்ந்தான். தஞ்சையில் தளபதி பிரட்டன், யூசுப் கானுக்கு கல்வி கற்றுக் கொடுத்தான். தனது ஆர்வத்தால் தமிழ், பிரெஞ்சு, போர்த்துகீசியம், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளை கற்றுத் தேர்ந்தான். அங்கிருந்து நெல்லூருக்கு மாற்றப்பட்டான் அங்கு தண்டல் காரனாக, ஹவில்தாராக, சுபேதார் என பதவி உயர்வை உழைப்பால் அடைந்தான். ஆற்காட்டில் சந்தா சாஹிப்புடன் வந்து தங்கி இருந்தபோது யூசுப்கானிடம் இருந்த வீரம், விவேகத்துடன் காதலும் சேர்ந்து கொண்டது. இந்தோ ஐரோப்பிய கலப்பின வழித்தோன்றலான மார்சியா என்ற பெண்ணைக் காதலித்து மணம் முடித்தான்.

திறமைக்கு திறவுகோல்

1750 களில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இந்தியாவில் நாடுபிடியுத்தம் நடந்த காலம். அதேநேரத்தில் 1751இல் ஆற்காட்டு நவாபு பதவிக்கு முகமது அலி வாலாஜாவிற்கும் சந்தா சாஹிப்பிற்கும் போட்டியும் யுத்தமும் மூண்டது. முகமது அலி வாலாஜா திருச்சிக்கு தப்பித்து ஆங்கிலேயர்களிடம் சரண்அடைந்தார். சந்தா சாஹிப்பின் தாக்குதலை இராபர்ட்கிளைவ் தலைமையில் ஆங்கிலேயர்கள் முறியடித்தனர். ஆற்காட்டை மீட்பதற்காக சந்தாசாஹிப் தனது மகன் இராசாசாஹிப் தலைமையில் 10,000 படைகளை அனுப்பினான். இவர்களுக்கு உறுதுணையாக நெல்லூர் சுபேதாராக இருந்த யூசுப்கான் இருந்தான். யுத்தத்தில் பிரெஞ்சு ஆதரவளித்த சந்தாசாஹிப் படைதோல்விகண்டது. ஆங்கிலேயர்கள் முகமது அலி வாலாஜாவை நவாபாக நியமித்தனர். இதற்கு கைமாறாக மதுரை மற்றும் நெல்லையில் வரிவசூலிக்கும் உரிமையை கிழக்கிந்திய கம்பெனிக்கு கொடுத்தான் நவாபு.

யுத்தக்களத்தில் முகமது யூசுப்கானின் திறமை கண்டு வியந்தான் இராபர்ட்கிளைவ் தனது படையுடன் அவனை இணைத்தான். மேஜர் ஸ்டிங்கர்லா, யூசுப்கானுக்கு ஐரோப்பிய இராணுவ முறைகளில் பயிற்சி அளித்தான். 1755ஆம் ஆண்டுகளில் மதுரை, நெல்லை பாளையக்காரர்களை அடக்குவதற்காக தளபதி அலெக்சாண்டர் கெரானுடன் யூசுப்கான் அனுப்பிவைக்கப்பட்டான்.

எட்டயபுரம், பாஞ்சாலங்குறிஞ்சி படைகளின் தளபதியாக இருந்த “வீரன்’’ அழகு முத்துக்கோனை, பெருநாழிகாட்டில் முகமது யூசுப்கான் சாகடித்தான். மறவர் பாளையங்களை தாக்கி வெற்றி கொண்டான். பூலித்தேவனை தோற்கடித்தான். மதுரையில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் வெற்றிபெற்றான். தனது வெற்றிப் பயணத்தை தடைகளைத் தகர்த்து தொடர்ந்தான். இக்காலத்தில் சென்னையை பிரெஞ்சுப்படை முற்றுகையிட்டதால் யூசுப்கான் சென்னைக்கு அழைக்கப்பட்டான் பிரெஞ்சு தளபதி தாமஸ் ஆர்தர்லாலி தலைமையில் முற்றுகையிட்ட பிரெஞ்சு படையை 1758இல் யூசுப்கான் யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதல் நடத்தி அதிசயிக்கத் தக்கவகையில் தோற்கடித்தான். இந்த தாக்குதல்பற்றி லாலி கூறுகையில், யூசுப்கான் தலைமையிலான படைகள் ஈக்களைப் போல் பறந்தார்கள் ஒரு பக்கத்தில் தடுத்து தாக்கிட முயலும்போது, அடுத்த நிமிடம் மறுபக்கத்திலிருந்து தாக்கினார்கள் என்று கூறினார். இவ்வெற்றி முகமது யூசுப்கானுக்கு பெரும் புகழ்தேடித்தந்தது. கிழக்கிந்திய கம்பெனி முகமது யூசுப்கானுக்கு “கமாண்டன்ட்’’ பதவி உயர்வை அளித்தது.

மதுரையின் மகுடத்தில்

கமாண்டோ கான் என்ற பதவி உயர்வுடன் முகமது யூசுப்கானை மதுரைக்கு மீண்டும் அனுப்பிவைத்தது கிழக்கிந்திய கம்பெனி. மதுரை மற்றும் திருநெல்வேலியில் வரிவசூல் செய்து வருடத்திற்கு 5 லட்சம் கொடுக்க வேண்டுமென கூறினர். யூசுப்கான் தெற்குசீமையின் தளநாயகனாக ஆட்சிபுரிய ஆரம்பித்தான். யூசுப்கான் சென்னையில் இருந்த போது மீனாட்சி அம்மன் கோயில் நிலங்களை எல்லாம் சூறையாடி இருந்தனர். யூசுப்கான் சூறையாடிய கயவர்களை தோற்கடித்து நிலங்களை மீட்டு கோயிலிடம் ஒப்படைத்தான். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை நிலைநாட்டுவதற்கு அன்றைய தினம் கள்ளர்கள் சவாலாக இருந்தனர். அவர்களது கலவரங்களை அடக்கி சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தினான். நத்தம் பகுதியில் கலவரங்களை அடக்கியபோது 2000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.

மதுரையின் குளங்களையும், ஏரிகளையும் பழுதுபார்த்து பாசன வசதிகளை மேம்படுத்தினான். இடிந்துகிடந்த கோட்டைகளை பழுதுபார்த்தான். நிதித்துறை மற்றும் வணிகர்கள் பாதுபாப்பை மேம்படுத்தினான். யூசுப்கான் காலத்தில் நிர்வாக செயல்பாடு மேம்பட்டது. இதனால் மதுரை மக்கள் இவனை “கமாந்தோகான்’’ என்று அன்பாக அழைத்தனர். அவர்களின் உள்ளங்களிலேயே குடியேறினான். இதனால் நவாபுக்கும், கம்பெனிக்கும் வருவாய் பெருகினாலும் யூசுப்கான் வலுவாவதை பெரும் ஆபத்தாகக் கருதினர்.

நவாப்பின் நயவஞ்சகம்

முகமது யூசுப்கானின் செல்வாக்கை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் முயற்சித்தான் திடீரென புதிய உத்தரவைப் பிறப்பித்தான். வணிகர்களும், மற்றவர்களும் என் மூலமாகத்தான் வரிகளை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டான். யூசுப்கான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை கிழக்கிந்திய கம்பெனியும் தந்திரமாகக் காயை நகர்த்தினர். நவாப்பின் பணியாளர்தான் யூசுப்கான் என்று அறிவித்தனர். இதனால் நவாபுக்கும், யூசுப்கானுக்கும் மோதல் அதிகமானது. டெல்லியின் ஷாவும், ஹைதராபாத் நிஜாம் கிமாம் அலியும் யூசுப்கான்தான் மதுரையின் சட்டப்படியான கவர்னர் என்று அறிவித்தாலும், நவாப்பும், கம்பெனியும் இதை ஏற்கவில்லை. 1761ஆம் ஆண்டு 7லட்சம் வரிவசூல் செய்து செலுத்திட முன்வந்தான்.

நவாபும், கம்பெனியும் எற்கவில்லை. காரணம் தங்களைவிட வலுவான மக்கள் செல்வாக்கு உள்ளவனை வளர்க்க விரும்பவில்லை. தெற்கு சீமையில் இருந்த பல கம்பெனி வணிகர்கள், யூசுப்கான் மக்களிடம் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வை உருவாக்கியுள்ளான் என்று புகார் தெரிவித்திருந்தனர். எனவே, கம்பெனியும், நவாபும் யூசுப்கானை கைது செய்துவர கேப்டன் மேன்சனிடம் உத்திரவிட்டனர். இதனிடையே யூசுப்கான் “தன்னை சுதந்திர ஆட்சியாளன்’’ என்று முதன்முதலாக அறிவித்துக்கொண்டு, படைதிரட்டினான் மதுரையில் 27,000 படைவீரர்களைக் கொண்டு பலமாக இருந்தான். அவனுக்கு ஆதரவாக பிரெஞ்சுத் தூதர்கள் வந்து சேர்ந்தனர்.

துரோகத்தின் வெற்றி

துரோகம் பல நேரத்தில் வீரம் செறிந்த போரின் முடிவை விரைவுபடுத்திவிடும், வீரர்கள் யுத்தக்களத்திலே வீழ்வதை தடுத்திடும். இங்கே யூசுப்கானுக்கும் அதுதான் நேர்ந்தது. 1763 செப்டம்பர் மாதம் காலோனல் மேன்சன் தலைமையில் மதுரையைத் தாக்கினர் தஞ்சை, திருவிதாங்கூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, பாளையங்கள் கும்பினியருடன் கைகோர்த்தனர். மழையின் காரணமாக தாக்குதல் நிறுத்தப்பட்டது. மீண்டும் கம்பெனி படையும், நவாபுவின் படையும் இணைந்து 22 நாட்கள் தாக்குதலை தொடுத்தனர். 120 ஐரோப்பியர்களும் 9 அதிகாரிகளும் மாண்டனர். கும்பினியர் படை நிலைகுலைந்து பின்வாங்கியது.
மீண்டும் சென்னை, பம்பாய் பகுதிகளிலிருந்து அதிக படைகள் நவீன ஆயுதங்கள் தருவித்து மதுரை மேஜர் பிரஸ்டன் தலைமையில் தாக்குதல் தொடங்கினர்.

முதலில் நத்தம் கள்ளநாட்டில் பாதைக் காவல்கள் அனைத்தையும் கைப்பற்றினர். 1764 ஜூன் மாதம் கோட்டையை முற்றுகையிட்டனர். கோட்டையைத் தகர்க்க முடியவில்லை. கும்பினியர் படையில் 160 பேர்கள் பலியாகினர். தாக்குதல் மூலம் தோற்கடிக்கும் பாத்தியங்கள் குறைவு எனக் கருதினர். எனவே, கோட்டைக்குச் செல்லும் உணவை நிறுத்தினர். குதிரையும், குரங்கும் உணவாக வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு குடிநீரை நிறுத்தினர். இதனால் கோட்டைக்குள் இருந்த படைகள் மற்றும் மக்களிடம் சோர்வும், குழப்பமும் ஏற்பட்டது. யூசுப்கான் தப்பிக்கும் முயற்சி வெற்றிபெறவில்லை. சரணடைய பிரெஞ்சு தளபதி மார்சன்ட் முடிவெடுத்தான். இந்த சர்ச்சையால் யூசுப்கான் தளபதியை அறைந்தான். இந்த அவமானத்தை பழிதீர்க்க எண்ணினான் மார்சன்ட், யூசுப்கான் சரண் அடையாமல் சண்டையிட்டு வீரமரணம் எய்திட விரும்பினான். இதனிடையே ஆற்காடு நவாபு, சிவகங்கை தளபதி தாண்டவராய பிள்ளை மூலமாக மதுரை கோட்டையில் இருந்த திவான் சீனிவாசராவ், யூசுப்கான், பாக்டா பாபா சாஹிப், தளபதிமார்சன் பேசி வஞ்சக வலையில் வீழ்த்த திட்டமினர். சரணடைவோருக்கும், சண்டையிட்டு மடிய விரும்பியவர்களுக்கும் இடையே துரோகத்தை அரங்கேற்றினர்.

1764 அக் 13இல் முகமது யூசுப்கான் தொழுகையில் ஈடுபட்டபோது சீனிவாசராவ், பாபாசாஹிப், மார்சன், இன்னும் சிலர் யூசுப்கானை அவனது டர்பன் கொண்டு கட்டிப்போட்டுவிட்டனர். விவரம் அறிந்து யூசுப்கானின் மனைவி சிறுபடையுடன் வந்தாலும், துரோகிகளிடம் வெற்றிபெற முடியவில்லை. எனவே, யூசுப்கான் கும்பினிப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டான். அக் 15ஆம் நாள் மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டான். இருமுறை கயிறு அறுந்து கீழே வீழ்ந்தான். மூன்றாவது முறை தூக்குக்கயிறு அவனது உயிரைப் பறித்தது. அவனைக் கண்டு அஞ்சு நடுங்கிய கும்பினியர்களும், நவாபும் அவனது தலையை திருச்சிக்கும், கைகளை பாளையங்கோட்டைக்கும், கால்களை தஞ்சைக்கும், திருவிதாங்கூருக்கும் அனுப்பிவைத்தனர்.

உடலை, தூக்கிலிட்ட சம்மட்டிபுரத்தில் புதைத்தனர். 1808இல் அந்த இடத்தில் மசூதி கட்டடப்பட்டு கான்சாஹிப் பள்ளி வாசல் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் ஏழாவது தலை முறையாக அதை பராமரித்து வருகின்றனர். கும்பினியர்களை எதிர்த்ததால் முதன்முதலாக தூக்கிலிப்பட்ட வீரன் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வீரத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றான். தன்னை “சுதந்திர ஆட்சியாளன்’’ என்று பறைசாற்றி கும்பினியர்களுடன் போரிட்டான் வீரமரணம் எய்தினான் 40 வயதே நிரம்பிய “கமாந்தோ கான்’’.